திமுகவை காமராஜரின் சாபம் சும்மா விடாது: அண்ணாமலை!

காமராஜர் பிறந்த விருதுநகரை இவ்வளவு பின்தங்கிய மாவட்டமாக மாற்றிய திமுகவை அவரது சாபம் சும்மா விடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருதுநகரில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:-

காமராஜர் ஐயா பிறந்த ஊரான விருதுநகரை இந்தியாவிலேயே பின்தங்கிய மாவட்டமாக திமுக மாற்றியுள்ளது. இதனால் விருதுநகரை மத்திய அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால் காமராஜரின் சாபம் திமுகவை சும்மா விடாது. எப்படி இருந்த ஊரை எப்படி நாசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசியலுக்காக சாதி மோதலை தூண்டி, மக்களை பிற்படுத்தப்பட்டவர்களாக வைத்துவிட்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மக்களுக்காக ஒரு திட்டத்தை கூட அரசு செயல்படுத்தவில்லை.

நமது நிதியமைச்சர் தங்கம் தென்னரசை பார்த்து கேட்கிறேன். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவுக்கு நீங்கள் செலவு செய்த பணத்தை நான் கணக்கு போடுகிறேன் பாருங்கள். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக 12 துறைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு மட்டுமே 36 கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமா.. கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க 84 கோடி ரூபாய் ஒதுக்கிருக்கீங்க.

இதுக்கெல்லாம் உங்களிடம் நிதி இருக்கு. ஆனால், திருச்சுழியில் போன வருஷம் நீங்கள் தொடங்குவதாக சொன்ன கலை அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் இல்லாததால், ஒரு பள்ளியில் அந்தக் கல்லூரியை திறந்திருக்கீங்க. நீங்க எல்லாம் பேச வந்துட்டீங்க.. நீங்க மதுரை எய்ம்ஸ் திட்டத்தை குறை சொல்றீங்க. இன்னைக்கு சொல்றேன்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு மே மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கல்வியில் முதன்மை மாவட்டமாக இருக்ககூடிய விருதுநகரில் ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தொடங்க திமுக அரசுக்கு மனசு வரவில்லை. இப்போது விருதுநகரில் பிரதமர் மோடிதான் ஒரு மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க போகிறார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.