நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் அருகே கைது!

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்து உள்ளது ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம். இந்த நிலையில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் பைபர் படகு ஒன்று நிற்பதாகம், அது இலங்கையை சேர்ந்தது என்பதுதான் அந்த தகவல். உடனே வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் ஒரே படகில், ஆறுகட்டுத்துறை மீனவ கிராமம் அருகே உள்ள கடல் பகுதியில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இலங்கைைய சேர்ந்த ஒரு பைபர் படகு நிற்பதையும் அதில் 3 மீனவர்கள் இருப்பதையும் அவர்கள் கண்டனர். உடனே அந்த படகை கைப்பற்றிய கடலோர காவல் போலீசார் அதில் இருந்த 3 பேரையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மூன்று பேரும் இலங்கையின் யாழ்பானத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ரீகன் (வயது 45), ஸ்ரீகாந்தன் (வயது 45) சிவக்குமார் (வயது 25), ஆகிய 3 பேரும் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு புறப்பட்டு உள்ளனர். அப்போது திடீரென அவர்கள் பயணித்த இஞ்சினில் பழுது ஏற்பட்டு உள்ளது. அப்பகுதிக்கு எந்த மீன்பிடி படகும், இலங்கை ரோந்து கப்பலும் வராததால் அவர்கள் செய்வதறியாமல் நடுக்கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள். சுமார் 4 நாட்கள் நடுக்கடலிலேயே இருந்த அவர்களின் படகு அலையின் வேகத்தில் நாகை அறுகாட்டுத் துறை கிராமம் அருகே வந்துள்ளது.

மூன்று இலங்கை மீனவர்களும் தமிழ்நாடு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த கடலோர குழும போலீசார், அவர்களின் படகு இஞ்சின், 40 கிலோ வலை, கயிறு, 70 லிட்டர் மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை கைப்பற்றி வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புழல் சிறையில் அடைப்பதற்காக அவர்கள் அழைத்து செல்லப்பட்டார்கள். இதற்கிடையே இந்த வழக்கை கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆகஸ்டு 6 ஆம் தேதி இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்த 3 பேரும் உண்மையிலேயே மீனவர்கள்தானா அல்லது கடல் கொள்ளையர்களா? இல்லை கஞ்சா கடத்த தமிழ்நாடு வந்தார்களா என்ற கோணங்களில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.