பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே மிக மோசமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்கு இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரமதராக வந்தார். அதன் பிறகு அங்குப் பொருளாதார சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்கள் மத்திய கிழக்கு நாடுகள், சர்வதேச நாணய நிதியம் ஆகியோரிடம் கடனை வாங்கி நாட்டை நடத்த வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டன. இதனால் அங்கு பெட்ரோல், டீசல் தொடங்கி அனைத்து அடிப்படை பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இதனால் இந்த நாடு ரொம்பவே இக்கட்டான சூழலில் தான் இருந்தது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மிக விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குக் காபந்து அரசு பதவியில் இருக்கிறது.
இம்ரான் கான் கடந்த 2022 ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்காக அவர் பாகிஸ்தான் முழுக்க சென்று பிரசாரம் செய்தார். இருப்பினும், கடந்த வாரம் தான் தோஷகானா வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்தச் சூழலில் தான் அவசரமாகத் தேர்தலை நடத்தி முடிக்க ஏதுவாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் அவசர அரசமாகக் கலைக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 3 நாட்களுக்குள் புதிய இடைக்கால பிரதமர் நியமிக்கப்படுவார். அதைத் தொடர்ந்து 3 மாதங்களில் அதாவது 90 நாட்களில் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது விதி என்றாலும் கூட அங்குப் பொருளாதார ரீதியில் அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில், தேர்தல் நடைபெற அடுத்தாண்டு வரை கூட ஆகலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சிக்கலால் அவதிப்படு வருகிறது. அதனால் அங்கு ஸ்திரமின்மை இல்லை. பாதுகாப்பு மற்றும் அரசியல் சவால்களைச் சுட்டிக் காட்டி அந்நாட்டு அரசு அடுத்தாண்டு வரை தேர்தலை ஒத்திவைக்கப் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நிலவும் இந்த நிலைமையைக் குறித்து அமெரிக்காவும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஜான் கிர்பி கூறுகையில், “பாகிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள், குறிப்பாக அங்கு நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் எங்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உண்மையில் பாகிஸ்தான் மட்டுமின்றி பயங்கரவாத ஒழிப்பில் நாங்கள் இணைந்து பணியாற்றும் எந்தவொரு நாட்டிலும் ஸ்திரமின்மைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானால் அது குறித்து நாங்கள் கவலை கொள்ளவே செய்வோம்” என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தவொரு தேர்தலிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 சீட்கள் இருக்கும் நிலையில், இதில் இம்ரான் கான் கட்சிக்கு 149 இடங்கள் கிடைத்தது. அதன் பிறகு அவர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரமதராகப் பதவியேற்றார். இருப்பினும், கடந்த 2022இல் அந்தக் கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத் திரும்பின.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தொடர்பாகக் குழப்பமான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ராணுவம் குறித்தும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. கடந்த காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மூன்று முறை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்துள்ளது. இதனால் மீண்டும் ராணுவ ஆட்சி வரவும் கூட வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நடந்தாலும் அதில் அவர்களுக்கு ஏற்ற நபர் வெல்லவில்லை என்றால், பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே அந்நாட்டின் ராணுவம் தான் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் தலையிட்டதாகக் கூறி இம்ரான் கான் சொன்னது இரு தரப்பிற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது. அதன் பின்னரே இம்ரான் கானுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தது.. அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.