திமுக மூத்த தலைவர் அன்பழகன் சிலை திறப்பு, “வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆகஸ்ட் 10 – ஆதிக்க இந்திக்கு எதிராக 1948-ம் ஆண்டு மொழிப் போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது. இனமானம் காக்கவும், மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியர் அன்பழகனின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். அன்பழகனின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும்,பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில், பகுத்தறிவில், சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழகத்தைக் கட்டி எழுப்ப பேராசிரியர் அன்பழகனின் சிலை முன்பு உறுதி ஏற்கிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வித் துறையின் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும், ‘இனமான பேராசிரியர்’ என்று மறைந்த முதல்வர் கருணாநிதியால், பெருமிதத்தோடு அழைத்துப் போற்றப்பட்டவர் க.அன்பழகன். பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1962-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967-ம் ஆண்டு தொடங்கி 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்த 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக, தான் அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தினார்.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த 30.11.2022 அன்று தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கடந்த 19.12.2022 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், அவ்வளாகத்துக்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, நூற்றாண்டு நினைவு வளைவினையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் இன்றைய தினம் சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அன்பழகனின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.