காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் இரு வாரங்களாக அவை அமளியால் முடங்கியது. இதைத்தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இன்று லோக்சபாவில் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்றே கூறினோம்” எனத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டுப் பேசினார் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், லோக்சபாவில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பதிலுரை ஆற்றினார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பதில் அளித்துப் பேசிய பிரதமர் மோடி, ஒன்றரை மணி நேரமாக மணிப்பூர் விவகாரம் பற்றி பேச்சே எடுக்காத நிலையில், மணிப்பூர் விவகாரம் பற்றி பேசுங்கள் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பினர். மணிப்பூர் பற்றி பேசாத பிரதமர் மோடியை கண்டித்து வெளிநடப்பு செய்த நிலையில், தனது பேச்சு தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையில் இல்லை. இதைத்தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் தீர்மானத்திற்கு எதிராக குரல் எழவில்லை. இதையடுத்து, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு தொடர்ந்து இடையூறு செய்ததாகவும் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது குற்றம்சாட்டி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை’ சிறப்புரிமைக் குழு விசாரிக்கும் வரை அவரை இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.