பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ஐஜி முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தமிழக காவல் துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன் (59). இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக பணியாற்றியபோது இவருக்கு கீழ் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியான பெண் எஸ்.பி ஒருவர், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், அவர் ‘செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பினார் என்றும், அறைக்கு தனியாக அழைத்து அத்துமீறியதாகவும், சம்மதம் இல்லாமல் செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும், பாலியல் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தினார். செல்போனில் ஐஜி அனுப்பிய தகவலும் ஆதாரமாக கொடுக்கப்பட்டு, ஆதாரமாக இணைத்து முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி கடந்த 2018ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அப்போது ஐஜி முருகன் செல்போனில் தன்னை தவறாக படம் எடுத்ததாகவும், தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் பெண் எஸ்பி அப்பேதைய டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார். மேலும் 2017ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தனக்கு பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்தாக அதே புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஏடிஜிபியாக இருந்த சீமா அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட விசாகா கமிட்டியினர் 2 தரப்பிடமும் விசாரித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு 2019ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. எனினும், சிபிசிஐடி போலீசார் பெண் எஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் ஐஜி முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதேநேரம், திமுக ஆட்சி தமிழகத்தில் வந்ததும், இந்த வழக்கை தமிழகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை எதிர்த்து ஐஜி முருகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் புகார் அளித்த பெண் எஸ்பி விருப்பப்படி கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. தற்போது முருகன் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி வருகிறார். ஐஜி முருகன் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் தமிழ்நாடு அரசிடமும் மற்றும் ஆளுநரிடமும் அனுமதி கோரி இருந்தனர். அதன்படி தமிழ்நாடு அரசும், ஆளுநரும் ஐஜி முருகன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளனர்.

அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஐஜி முருகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 342, 354, 354(ஏ1), 354(ஏ2), 354(ஏ3) மற்றும் பிரிவு 4 பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.