அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதனை ஒரு பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் தீவுகள், முக்கிய நிலப்பகுதியில் இருந்து மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு மாய் ஆகும். இத்தீவின் சில இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுத் தீ பற்றியது. அருகில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக வேகமாகப் பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தீயில் இருந்து தப்பிக்க பலர் கடலில் குதித்தனர். தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததில் சுமார் 271 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதில் லைஹானா நகரம் முற்றிலும் உருக்குலைந்தது. தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 என அதிகரித்துள்ளது. மேலும், பலர் தீக்காயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தகவல். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உருக்குலைந்த லைஹானா நகரில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிர கணக்கான மக்கள் இந்த தீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களில் முகாமிட்டு, விமானத்துக்காக காத்துள்ளனர். ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட பேரழிவுகளில் (1960-ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு) தற்போது ஏற்பட்ட காட்டுத் தீ ஒன்றாக உள்ளது. இந்த தீயினால் மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அதோடு லைஹானாவின் புராதன சின்னங்கள், 60 அடி உயர ஆலமரத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை என சூழலியல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை பேரழிவு என அறிவித்துள்ளார். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், அதீத வெப்பம், அதிக காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் உலர்ந்த தாவரங்கள் போன்றவை காட்டுத் தீயின் பரவலுக்கு காரணம் என சூழலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.