புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனையான நிகழ்வு என்று நாங்குநேரி சம்பவம் குறித்து தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவாற்றல் மிக்க மாணவர்களாக உருவாக வேண்டியவர்கள் அரிவாளோடு அலைவது மிகுந்த மன வேதனையை தருகிறது. சாதிய வேற்றுமைகள் குறைய வேண்டும்.. களைய வேண்டும் என்று நான் நினைத்துகொண்டிருக்கும் இந்த வேளையில், குழந்தைகள் மனதில் இந்த சாதிய வேற்றுமை, சாதிய தீ பரவிக்கொண்டிருப்பது என்பது நமக்கெல்லாம் கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. கையில் புத்தகத்தை எடுத்து திரியவேண்டியவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு திரிவது மிகுந்த வேதனை.. அதே ஊரில் சாதிய வேற்றுமை கொடுமைகளினால் 50 குடும்பங்கள் போய்விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. அப்படியென்றால் அங்கு எல்லாம் நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. காவல்துறையினர் இதையெல்லாம் ஏன் கண்காணிக்க மறுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் கண்டனங்கள், ஆதரவுகள் என்பதை தாண்டி, கட்சி எல்லைகளை தாண்டி.. அடுத்த ஊரில் என்ன நடப்பது என்பதை பார்த்துக்கொண்டு நம் ஊரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க தவறிவிட்டோம்.
தம்பி நன்றாக படித்தார் என்பதற்காக வெட்டப்பட்டுள்ளார். அரசாங்கம் இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். அரசு மட்டுமின்றி பொதுமக்களும் இதை அறிய வேண்டும். மத்த ஊரை பற்றி நாம் கவலைப்படுகிறோம்.. மற்ற மாநிலங்களை பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளாமல் விடுகிறோம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.