பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றம் செய்யப்பட்ட பிறகு அவர் 4 மாதமாக பேசாமல் இருப்பதாக அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் தான் பேசாமல் இருந்தது ஏன்? என்பது பற்றி அண்ணாமலைக்கு காட்டமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார். இதையடுத்து தமிழ்நாட்டில் நிதி நிலையை மேம்படுத்தும் பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிர்வகித்து வந்த நிதித்துறை தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது. பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜ் நிதி அமைச்சராக இருந்தபோது அடிக்கடி மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்து வந்தார். அதோடு பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று மத்திய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு புள்ளி விபரங்களோடு பதிலளித்து வந்தார். ஆனால் நிதித்துறையில் இருந்து அவர் மாற்றப்பட்ட பிறகு அவர் பொதுவெளியில் பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி விவாதங்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவ்வளவாக பங்கேற்கவில்லை. இதற்கிடையே தான் பிடிஆர் பெயரில் வெளியான ஆடியோவால் தான் அவரது துறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றம் செய்துள்ளதாகவும், துறை மாற்றத்தால் 4 மாதமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசாமல் மவுனமாக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் தான் நேற்று மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சூழ்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது அண்ணாமலையின் விமர்சனம் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவது சரியல்ல. எந்த துறையில் இருக்கிறோம். எப்போது பேச வேண்டும் என்பதை அறிந்து பேசுவதே விதிமுறை. நாகரீகம். நான் 2021ல் அமைச்சரான போது எனக்கு பல்வேறு பொறுப்புகள் இருந்தன. அந்த அடிப்படையிலும் அவ்வப்போது பேசினேன். நிதித்துறை, ஓய்வூதியத்துறை, வளர்ச்சி திட்டமிடுதல் துறை, மனித வள மேலாண்மை துறை என இத்தனை துறைகளுக்கு அமைச்சராக இருந்ததால் தத்துவ ரீதியிலும், மேலாண்மை ரீதியிலும் பங்கு வகித்ததால் அடிக்கடி பேசினேன். தத்துவத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் கொள்கையையும், திறனையும் செயல்பாட்டையும் விளக்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது. அமைச்சர் இலாகா மாற்றிய பிறகு இன்று ஐடி பற்றியோ டிஜிட்டல் சேவை பற்றியோ தான் நான் பேசுவேன். நிதி துறை உள்ளிட்ட துறைகள் குறித்து அந்தந்த துறை அமைச்சர்கள் பேசுவது தான் மரபு, நாகரீகம்” எனக்கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.