வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார். முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது. சுதந்திர தினத்தன்று காவல் துறையினருக்கு பதக்கங்களும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் அமைச்சரின் காவல் பதக்கம் காவல் துறை உயர் அதிகாரிகள் 6 பேருக்கு வழங்கப்படவுள்ளது.
வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்.பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் ஆர்.குமார் உள்பட 6 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 போலீசருக்கும் முதல் அமைச்சர் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்ட்டுள்ளது.