நீட் தேர்வு தோல்வி: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை!

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் அவரது தந்தையும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டது. முதலில் ப்ளஸ் 2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என மாறிவிட்டது. நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மேலும், தமிழக அரசு சார்பில் நீட் விலக்கு மசோதாவும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோச்சிங் சென்டர்களில் சென்று படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதனால் வசதி இல்லாத மாணவர்களால் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல முடியாததால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன்,19 என்ற மாணவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் அவர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர்.

இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, “என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, “கடந்த ஒரு வருடமாக எந்த மாணவரும் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை” என பேசியிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவ,மாணவிகளின் உயிரை காவு வாங்கியுள்ளது நீட் தேர்வு. இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ என்று பெற்றோர்கள் பலரும் கொந்தளிப்புடன் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தன்னுடன் படித்த ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது நண்பனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணம்தான் மருத்துவ படிப்பினை தீர்மானிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஃபயாஸ்தின் என்ற அந்த மாணவர். நீட் தேர்வில் நான் 160 மதிப்பெண்தான் எடுத்தேன். என்னோட அப்பா வசதியாக இருந்ததனால் தனியார் மருத்துவ கல்லூரியில் 25 லட்சம் ரூபாய் பணம் கட்டி படிக்க சேர்த்து விட்டார். என்னோட கூட படிச்ச ஜெகதீஷ் நல்ல மார்க் எடுத்தார். அவனால 25 லட்சம் ரூபாய் கட்ட முடியவில்லை. அவன் நல்லா படிக்கிற பையன். 2 தடவை நீட் தேர்வு எழுதியும் நன்றாகத்தான் மார்க் எடுத்தார். அவரால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை 25 லட்சம் பணம் கட்ட முடியவில்லை. இங்கே எல்லாமே பொருளாதார அடிப்படையை மையமாக வைத்துதான் இருக்கிறது. அப்போ அதிகமாக பணம் கட்டி படித்தவர்கள் எப்படி சேவை மனப்பான்மையோடு டாக்டர் தொழில் செய்வார்கள். ஜெகதீஸ்வரன் இந்த முறை நீட் தேர்வில் 400 மார்க் எடுத்திருந்தார். அவருடைய அப்பாவினால் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் கட்டி படிக்க வைக்க வசதியில்லை. டாக்டராக முடியவில்லை என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஸ்வரன். இந்த தேர்வை வச்சு என்னதான் சாதிக்கப்போறீங்க? எத்தனை பசங்களை சாகடிக்கப்போறாங்கனு தெரியலை மத்திய அரசும் ஆளுநரும் என்றும் மாணவர் ஃபயாஸ்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.