ராமேஸ்வரத்தில் வேத, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமஸ்கிருத வேதபாடசாலைகளை உருவாக்குவதும், அதன் மூலம் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைப் கற்று தருவதும்தான் இந்த சமஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையத்தின் நோக்கமாகும். எனவே வேத கல்வியை ஊக்குவிக்க சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஏற்கெனவே மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்ப ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதாவது, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங்களை புதியதாக ராமேஸ்வரம், பத்ரிநாத், துவாரகா ஆகிய நகரங்களில் அமைக்கப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பு. ராமேஸ்வரத்தை பொறுத்த அளவில் ஏற்கெனவே கடந்த 1965ம் ஆண்டு முதல் தேவஸ்தான பாடசாலை மூலம் சமஸ்கிருத வேதங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இது மூடப்பட்டது. இந்நிலையில்தான் இதே ராமேஸ்வரத்தில் புதிய சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் அமையும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
என்னதான் பிரதமர் நரேந்திர மோடி மேடைக்கு மேடை தமிழ் பெருமைகளை பேசினாலும், தமிழுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதியைதான் வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 2014-15ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஒரே ஒரு முறை கூட சமஸ்கிருதத்தை விட தமிழுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் அமையும் எனும் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, “தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய். செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறள்பீட விருது என்பது மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் அளிக்கப்படும் ஒரு விருதாகும். தமிழ் வளர்ச்சிக்காக இவர்கள் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.