பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும்: சீமான்

பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பூந்தமல்லியில் வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலையில், மே 18 இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான் இதனை குறிப்பிட்டுப் பேசியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், ” முன்னதாக தமிழக அரசால் நான் கைது செய்யப்பட்ட போது 6 மாதகாலம் வேலூர் சிறையில் அடைபடுவதற்கு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? நான் வேலூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு என் தம்பிகளை மொத்தமாக 3000 பேர்தான் பார்த்திருந்தார்கள். நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை சந்தித்தவர்கள் 50,000 பேர். அதற்கு பிறகுதான் இவர்கள் இவ்வளவு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியபடுத்தினார். இந்த தீர்ப்பு அனைவருக்கும் பொருந்தும். அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இதற்கு தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள்” என்றார்.