மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவோடு கூட்டணி சேரும் திட்டம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
சரத் பவார் பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாகவும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வந்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாஜகவோடு கூட்டணி சேருமாறு சில நலம் விரும்பிகள் என்னிடம் பேசினார்கள். ஆனால், எனக்கு அத்தகைய திட்டம் இல்லை. பிரித்விராஜ் சவான் என்ன கூறினார் என எனக்குத் தெரியாது. அதுபோன்ற ஒரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அஜித் பவார் என்னைச் சந்தித்துப் பேசினார். நான் அதை மறுக்கவில்லை. குடும்பத்தின் தலைவர் என்ற முறையில், குடும்ப உறுப்பினர்களோடு நான் பேசுகிறேன். அதை வைத்து நான் பாஜகவோடு கூட்டணி சேர இருப்பதாகக் கூறுவது வதந்தி. அதில் எந்த உண்மையும் இல்லை. கட்சியில் நான்தான் பெரிய தலைவர். எனக்கு யார், பதவி தர முடியும்?
சிபிஎஸ்இ தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 14ம் தேதி தேச பிரிவினையின் சோக தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது நிகழ்ந்த துயரமான சம்பவத்தை நமது சமூகம் மறந்து கொண்டிருக்கும்போது, அரசு இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களிடையே வெறுப்பை பரப்பி சமூகத்தை பிரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் இதில் தெளிவாகத் தெரிகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. கோவா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதற்கு உதாரணம். மணிப்பூரில் கடந்த 99 நாட்களாக நிலைமை மோசமடைந்துள்ளது. ஆனால், இதுபற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே 3 நிமிடமும், சுதந்திர தின உரையில் 5 நிமிடமும் மட்டுமே பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அவருக்கு வட கிழக்கு குறித்து கவலை இல்லை. மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் மட்டும்தான் அவருக்கு கவலை இருக்கிறது. நான் மீண்டும் வருவேன் என மோடி கூறி இருக்கிறார். இதேபோலத்தான் தற்போதைய மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசும் முன்பு கூறினார். அவருக்கு என்ன நடந்ததோ அதுதான் மோடிக்கும் நடக்கும். இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.