மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-
நாட்டின் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது போல பேசியிருக்கிறார். பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் நாடு நிலைகுலைந்துள்ளது. ஆனால், 3-வது முறையாக தான் பிரதமராக வந்தால், நாடு பொருளாதார பலமிக்க மிக்க நாடாகும் என்று பிரதமர் பேசுகிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவோம், கருப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.
இப்போது பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை? விவசாயிகளுக்கு இரு மடங்கு உயர்த்தப்படும் என பிரதமர் அறிவித்தது என்னவானது? விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் எதிரான சட்டங்களை கொண்டு வந்தனர். மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்வது போல தெரியவில்லை. அங்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனில், மணிப்பூர் முதல்வர் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். ஆனால், பிரதமரும், அமித் ஷாவும் இதற்குத் தயாராக இல்லை.
நாட்டின், அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், பாஜகவை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுக் கருத்து இந்திய அளவில் உருவாகி உள்ளது. இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் வரும் 31 மற்றும் செப்டம்பர்- 1-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியால் மோடிக்கு அதிர்ச்சியும், ஆற்றாமையும் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவினருக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாற்று ஆட்சி அமையும்போது, எல்லா கட்சியினர் இணைந்த இந்தியா கூட்டணியால், பிரதமர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும். கடந்த காலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்போது அதுபோன்றதொரு தலைமையைத் தேர்ந்தெடுத்தோம். இந்தியக் குற்றவியல் சட்டம் உள்ளிட்டவற்றின் பெயர் மாற்றம் செய்கின்றனர். இது மொழி பிரச்சினை மட்டுமல்ல, உள்ளார்ந்த பிரச்சினை என வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டில் கடுமையான சட்டங்களை பயன்படுத்தும் அரசாக பாஜக உள்ளது. தமிழக ஆளுநர் அகற்றப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.