மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் மதுரை மாநாட்டுக்குத் தடைவிதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‛‛மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் வரும் 20ம் தேதி அதிமுக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த இடம் விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தினமும் ஏராளமான விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன. இந்த பகுதியில் விமானங்கள் மிகவும் தாழ்வாகவே பறந்து செல்கின்றன. ஆனால் விமான நிலைய அதிகாரிகளிடம் தடையின்மை சான்று பெறவில்லை. இந்த மாநாட்டுக்கு 15 லட்சம் பேர் கூட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டாசு வெடிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பட்டாசு வெடிக்க தடைப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. பொதுவாக விமான நிலையத்தை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவுக்கு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விளம்பர பலகை கூட வைக்க முடியாது. இத்தகைய சூழலில் மாநாடு ஏற்பாடு நடக்கிறது. மேலும் இந்த மாநாட்டால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.