காட்டுத் தீயால் கனடாவில் அவசரநிலை அறிவிப்பு!

கனடாவில் வடமேற்கு பகுதியில் காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால் அந்த பகதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. மவுய் பகுதியில் பரவிய இந்த காட்டுத் தீ மளமளவென லஹைனா, குலா உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களும் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் தீக்கு இரையாகியுள்ளன. இந்த கொடூர தீ விபத்தில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட உடல்களில் 5 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தளவுக்கு அவர்களின் உடல் தீயில் கருகி அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளது. ஒரு பக்கம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மறுபக்கம் மீட்புப்பணிகளும் துரிதமாய் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டுத் தீயால் உருக்குலைந்துள்ள ஹவாய் தீவு பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஹவாய் தீவு சந்தித்துள்ள இந்த பேரழிவு பெரும் வருத்தத்தை அளிப்பதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடாவின் வட மேற்கு பிராந்தியங்களிலும் காட்டூத் தீ பரவி வருகிறது. வடமேற்கு பிராந்தியத்தின் தலைநகரான யெல்லோநைஃப்பும் காட்டுத் தீயின் ஆபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கனடா அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. தீயை கட்டுப்படுத்த காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளுக்கு கனேடிய அரசு ராணுவத்தையும் அனுப்பியுள்ளது.

ஆல்பர்ட்டா எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பிராந்தியங்கள் மற்றும் தெற்கு ஸ்லேவ் பகுதிகளில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் குக்கிராமமான எண்டர்பிரைஸ், தீயினால் முற்றிலும் அழிந்துவிட்டதாக, எண்டர்பிரைஸ் மேயர் தெரிவித்துள்ளார்.