நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை என்றும், இந்தியாவின் வேர் சொல் நமது நாட்டிலேயே இருக்கிறது எனவும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவுக்கு பெயர் வந்த விதம் தொடர்பாக ஏராளமான கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது. சிந்து நதியை கடந்து வந்தால்தான் இந்தியாவின் நிலப்பரப்பை அடைய முடியும் என்பதற்காக இந்த வழியாக வந்த பாரசீகர்கள் இந்து என்று அழைத்தனர். அதேபோல நவீன காலத்தில் ஆங்கிலேயர்கள்தான் இந்தியா என்று பெயர் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்துஸ்தான், இந்த், இண்டிகா என பல பெயர்களில் இந்தியா குறிப்பிடப்பட்டது. இருப்பினும் இந்தியா என்கிற சொல்லுக்கான மூல சொல் இதுதான் என்று சரியாக குறிப்பிட்டு சொல்லும்படி சரியான காரணங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்வில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்தியா எனும் சொல்லுக்கான மூல சொல்லாக கடந்த 1909ம் ஆண்டு அயோத்திதாசர் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:-
சமீபத்தில் ‘இந்தியா’ எனும் பெயர் தொடர்பாக விவாதங்கள் அடிக்கடி மேலெழுந்திருக்கிறது. இந்தியா என நம் நாட்டிற்கு பெயர் வந்தவிதம் சுவாரஸ்யமானது. அரசியலமைப்பு கூட்டத்தொடரில் முதல் அமர்வு தொடங்கி கடைசி அமர்வில்தான் இந்த நாட்டிற்கு என்ன பெயர் வைப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. இந்தியாவா? இந்துஸ்தானா? பாரதமா? பாரத வர்ஷமா? என எத்தனையோ பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பதே கடினமாக இருக்கும்போது ஒரு நாட்டிற்கே பெயர் வைப்பது என்றால் எப்படி இருக்கும்? இப்படியாக சுமார் 3 ஆண்டு காலம் வரை இந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. கடைசியாகதான் இந்தியா என்கிற பாரதம் என்று பெயர் வைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட பெயரில் ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. தற்போது இந்தியா எனும் பெயர் இருக்கிறது. இந்த பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைத்ததாக சொல்லப்படுகிறது. அது உண்மை கிடையாது. புத்தனுடைய இன்னொரு பெயர் ‘ஐந்திரன்’. அதிலிருந்துதான் ஐந்திரம் என்று வந்தது. ஐந்திரத்திலிருந்துதான் இந்திரன் எனும் பெயர் வந்தது. ஐந்திர நாட, இந்திர நாடு, இந்திர தேசம், இந்திரர்கள் இருந்த தேசம், இந்தியர்களின் தேசமாக மாறியது. புத்தனின் பெயரிலிருந்து உருவான ஒரு சொல் இந்தியா என்பது அயோத்திதாசர் 1909ம் ஆண்டு எழுதியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.