100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும்: தமிழிசை

2047-ம் ஆண்டுக்குள், நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகிற்கு தலைமை தாங்கும் பெருமையை இந்தியா பெறப்போகிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் ‘‘என் மண் என் தேசம்’’ இயக்கத்தின் ஒரு‌பகுதியாக அமுத மண் கலச ஊர்வலம் மற்றும் மரம் நடும் விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்து தேச ஒற்றுமைக்கான ஐந்து உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முதல்வர் ரங்கசாமி விழாவுக்கு தலைமை தாங்கினார். விழாவில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது:-

அடிப்படை கட்டமைப்பு ஒரு நாட்டுக்கு மிகவும் அவசியம். இப்பொழுதுதான் முழுமையான கட்டமைப்பை நாம் பெற்று வருகிறோம். இது வரை இந்த நாட்டில் நிகழாத மாற்றங்கள் இப்பொழுது நடந்து வருகிறது. சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க இன்று இந்தியாவின் சந்திராயன் நிலவை நெருங்கி விட்டது நமக்கு பெருமை சேர்த்திருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. பிரதமர் தனது ஒவ்வொரு நொடியையும் இந்தியாவை முன்னேற்றமடைய சிந்திக்கிறார். இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள், நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகிற்கு தலைமை தாங்கும் பெருமையை இந்தியா பெறப்போகிறது. இதற்கு இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் சான்று.

வறுமைக் கோட்டிற்குக்கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலகப் பொருளாதார மையம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து இன்று உலகில் மூன்றாவது பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. முதல்வரின் உதவினால் புதுச்சேரி மக்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அனைத்து விதத்திலும் இந்த நாடு முன்னேறி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ளாமல் சிலர் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.