உக்ரைனின் செர்னிவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அதன் மீது போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களாக நீடித்து வரும் போரில் உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே நேட்டோ அமைப்பில் இணைய ஸ்வீடன் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக ஸ்வீடன் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதல்முறையாக நேற்று முன்தினம் ஸ்வீடன் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் ரஷ்ய விமானப்படை நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர். 15 குழந்தைகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி ஸ்வீடனில் இருந்து புறப்படும் முன் வௌியிட்டுள்ள விடியோ பதிவில், “ரஷ்யாவின் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்து விட்டனர். ரஷ்யாவின் இந்த பயங்கரவாத செயலுக்கு உக்ரைன் வீரர்கள் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று சூளுரைத்துள்ளார்.