டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை: அமலாக்கத்துறை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.

கடந்த 1995 – 1996 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் அமமுக பொதுச் செயலாளரான டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர், ஃபெரா என்னும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 1998 ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம், 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தினகரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி, அதனை ரத்து செய்து கடந்த 2003 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “ஃபெரா சட்டத்தின் கீழ் தினகரனுக்கு விதிக்கப்பட்ட 28 கோடி ரூபாய் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக அதை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருவதால், அவரை திவாலானவர் என அறிவி்க்கக் கோருவதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை என விளக்கமளித்தார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், திவாலானவர் என அறிவி்க்க அது உரிமையியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார். உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால், அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது என அவர் கூறினார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடையாததால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.