அனல் மின்நிலையங்கள் மூடல்; சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: –
அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தண்டபாணி கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், நெருக்கடிக்கும் இடையே இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காக்க போராடி வரும் எங்களைப் போன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் கருத்து நம்பிக்கையையும், வலிமையையும் அளிக்கிறது. அனல் மின்நிலையங்கள் மூடப்படுவது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.