அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நில அபகரிப்பு வழக்கில்தான் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கே.என்.நேரு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பவர் நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவர் கடந்த 2006 – 2011 கால கட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்ததோடு திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். அப்போது, திருச்சியில் திமுகவுக்கு புதிய மாவட்ட அலுவலகம் அமைக்க முடிவு செய்தார். அதன்படி, திருச்சியின் மையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போல திருச்சி அலுவலகத்திற்கு கலைஞர் அறிவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டது.

‘கலைஞர் அறிவாலயம்’ கட்டடத்துக்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு, தன்னை மிரட்டி மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி குற்றப்பிரிவு போலீசார் கே.என்.நேரு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கே.என்.நேரு அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நில அபகரிப்பு வழக்கு கடந்த பல ஆண்டுகளாக திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு மனுதாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரசமாக சென்றுவிட்டதாக தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.