கிரீஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‛கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்தார். தென்ஆப்பிரிக்கா உள்பட சில நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவு பற்றி விவாதித்தார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்றார். இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி கிரீஸ் அதிபர் கேதரீனா சகெல்லரோபவுலுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் . இருநாடுகளின் உறவு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த வேளையில் பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கிரீஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருதை பிரதமர் மோடிக்கு கிரீஸ் அதிபர் கேதரீனா சகெல்லரோபவுலு வழங்கினார். இந்த விருது என்பது கிரீஸ் நாட்டின் 2வது உயரிய விருதாகும்.

பொதுவாக இந்த விருது என்பது கிரீஸ் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் தலைவர்களுக்கு வழங்கப்படும். அதன்படி பிரதமர் மோடிக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிரீஸ் நாட்டின் தரப்பில், ‛‛இந்திய மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் துணிச்சலாக சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தியா மீது கிரீஸ் மக்கள் நல்ல மரியாதையை வைத்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛எனக்கு கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருது வழங்கிய அதிபர் கேதரீனா சகெல்லரோபவுலா மற்றும் கிரீஸ் அரசுக்கும், மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறனே். இந்த விருது என்பது கிரீஸ் மக்கள் இந்தியா மீது வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.