அதிமுக மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயம்: ஜெயக்குமாரை கிண்டல் செய்த உதயநிதி!

அதிமுக மதுரை மாநாட்டிற்கு வந்த கட்சி நிர்வாகியின் மனைவி மாயமான விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் தான் போலீஸார் முதலில் விசாரணை நடத்துவார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுததியுள்ளது.

மதுரையில் அதிமுக மாநில மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். இத்தனை பிரம்மாண்டமாக நடந்த போதிலும், அதிமுக மாநாட்டில் சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றதை மறுக்க முடியாது. குறிப்பாக, மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் பலர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போதே கிளம்பியது; தொண்டர்களுக்காக சமைத்த உணவுகள் டன் கணக்கில் வீணானது போன்றவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. இதேபோல, அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் தனது மனைவி மாயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி மாநாடு என்ற பெயரில் மதுரையில் ஒரு கட்சி ஒன்றை நடத்தினாங்க நியாபம் இருக்கா? ஒரு மாநாட்டை எப்படி எல்லாம் நடத்தக் கூடாது என்பதற்கு அந்த மாநாடு தான் சரியான உதாரணம். அந்த அளவுக்கு மோசமாக அந்த மாநாடு நடந்துச்சி. அது எல்லாத்தையும் விட முக்கியமான சம்பவம் அங்கே நடந்துருக்கு. அந்த மாநாட்டுக்கு வந்த கட்சி நிர்வாகியோட மனைவி காணாம போயிட்டாங்களாம். அவர் போலீஸ்ல புகார் கொடுத்துருக்கார். போலீஸார் முதலில் விசாரிக்க போவது ஜெயக்குமாரை தான். ஏங்க.. நீங்க வேற தப்பா நினைச்சுக்காதீங்க. அவர்தான் மாநாட்டுக்கு பொறுப்பாளர். அந்த அர்த்தத்தில் தான் நான் கூறினேன்” என உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் அந்தரங்க விஷயங்கள் தொடர்பாக ஜெயக்குமார் பேசியது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.