மதுரையில் 9 பேர் உயிரிழக்கக் காரணமான சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில், சதித் திட்டம் எதுவும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்தார்.
மதுரை ரயில் நிலையம் அருகே போடி லைன் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில், தேநீர் தயாரிக்க காஸ் சிலிண்டரை பயன்படுத்தியபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் இறந்தனர். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 2-வது நாளாக தடயவியல் துறையினர் விபத்துக்குள்ளான பெட்டியில் ஆய்வுசெய்து கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். மேலும் வெடித்துச் சிதறிய காஸ் சிலிண்டரின் பாகங்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று மதுரை வந்தார். அவர் விபத்துக்குள்ளான ரயில் பெட்டியைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விபத்தில் காயமடைந்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைப் பார்த்து நலம் விசாரித்தார். மேலும், ரயில்வே கோட்ட மேலாளர் ப.அனந்த் உள்ளிட்டோரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்துக் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். ரயிலில் தடை செய்யப்பட்ட காஸ் சிலிண்டரை பயன்படுத்தியோர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும். இந்த தீ விபத்துச் சம்பவத்தில் இதுவரை நடந்த விசாரணையில் சதித்திட்டம் எதுவும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் உயிர் தப்பியோரில் முதல்கட்டமாக 28 பேர், தெற்கு ரயில்வே ஏற்பாட்டில் நேற்று விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை மதுரை மேயர் இந்திராணி வழியனுப்பினார். விபத்தில் இறந்த 9 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு மரப்பெட்டிகளில் வைத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன. பின்னர் சென்னை- லக்னோ விமானத்தில் 4 உடல்களும், சென்னை – பெங்களூரு வழியாக லக்னோ செல்லும் மற்றொரு விமானத்தில் 5 உடல்களும் அனுப்பப்பட்டன. மதுரையில் இருந்து 4 மத்திய ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களும், 4 ரயில்வே போலீஸாரும் உடன் சென்றனர். முன்னதாக இறந்த பயணிகளின் உடல்களுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட சுற்றுலா முகவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சம்பவத்தின்போது பதற்றத்தில் தப்பி ஓடிய சமையல்காரர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் நேற்று பிடித்தனர். அவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி விசாரணை நடத்தினார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், “ரயில்வே சுற்றுலாக் கழகம் முன்பதிவு செய்த பெட்டியில் காலியிடம் இருந்ததால் லக்னோவில் இருந்து சமையல்காரர் உட்பட 5 பேர் கூடுதலாக பயணித்துள்ளனர். இவர்களில் ஒருவர்தான் சம்பவத்தன்று அதிகாலையில் காஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதன்மூலம் தீ எப்படி பரவியது? ஏன் தீயை அணைக்கவில்லை? என அவரிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம். சம்பந்தப்பட்ட சுற்றுலா முகவரைப் பிடிக்க தனிப்படை ஒன்றை லக்னோ அனுப்ப திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.