சிலிண்டர் விலையை திடீரென குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது: கே.எஸ்.அழகிரி!

சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்க முடிவெடுத்துள்ளது விலை குறைப்பே கிடையாது, பாஜக அரசின் ஏமாற்று வேலை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதற்கும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இந்த, சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது, கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1,118 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்தியது பாஜக அரசு, தற்போது ரூ.200 குறைத்துள்ளது என விமர்சித்து வருகின்றனர்.

5 மாநில தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது வெறும் கண்துடைப்பு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபோதும் விலையை அதிகரித்து வந்த பாஜக அரசு, தேர்தலையொட்டி இப்போது மக்களை ஏமாற்ற நினைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூறியதாவது:-

சிலிண்டர் விலையை திடீரென குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடி இந்திய மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை. எப்போதுமே விலை நிர்ணயம் என்பது மூலப்பொருள் என்ன விலை? அதை உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதற்கான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றை மதிப்பிட்டுத் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் என விற்றது. அன்றைக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டரை கொடுத்தார். இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெறும் 70 டாலர். சில நேரங்களில் 60 டாலர். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தை விட பாதியளவாக விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரப்படி சிலிண்டர் விலை தற்போது ரூ.200 ஆக இருக்க வேண்டும். ஆனால், இப்போது 1200 ரூபாயாக விற்கிறார். ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200 வரை உயர்த்திவிட்டு, தற்போது விலை குறைப்பதாக நாடகமாடுகிறது மத்திய பாஜக அரசு.

அந்தக்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒட்டகத்தின் மீது அளவுக்கு அதிகமாக சுமையை ஏற்றி அது சிரமப்படும் நேரத்தில், ஒரு சிறு சுமையை ஒட்டகத்தின் கண்ணில் படுவது போல எடுத்து கீழே போடுவார்கள் ஒட்டகக்காரர்கள். ஒட்டகம் தன் மீதுள்ள சுமை குறைந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும். அதைத்தான் இன்று மோடி செய்கிறார். இந்திய மக்கள் அறிவார்ந்தவர்கள், பாஜக அரசின் ஏமாற்று வித்தையை மக்கள் உணர்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.