பாஜகவுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?: வானதி சீனிவாசன்

பாஜகவுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம், “நீங்கள் நடனமாடுகிறீர்கள்.. பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்கள். படத்தில் நடிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் குழுங்கி குழுங்கி சிரித்தார். அதன் பின் அவர் கூறியதாவது:-

கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்த வேண்டும். நெசவாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேஷன் நிகழ்ச்சி நடத்தினோம். அதை 6 ஆண்டுகளாக செய்து வருகிறோம். திருவோண திருநாளில் இந்த கைக்கோட்டு கழி என்பது எல்லா பெண்களும் சேர்ந்து கொண்டாடும் நடனம். ஓணத்தை ஒட்டி அதில் கலந்துகொள்கிறோம். இதற்கும் சினிமாவுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்? அந்த வாய்ப்பு எல்லாம் கிடையாது.

மேயர் என்பவர் ஒரு அரசியல் அதிகாரத்தின் முதன்மையான நபராக மாநகராட்சியில் இருப்பவர். அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது புகார் தெரிவிக்கப்படுவதன் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் ஆட்சிக்கு வரும்போது மக்களை மிரட்டுவது, அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை வளைப்பது என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் விசயம்.

இன்று கோவை மேயர் விசயத்தில்கூட முதலமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, எப்படி சாதாரண மக்களும் சட்டத்தின் ஆட்சியின் பலனை பெற முடியும் என்பதை பார்க்க முடியும். அதனால் இந்த விசயத்தில் உண்மையை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்று நடக்கிறது. இதை கட்சி சார்ந்ததாக நான் பார்க்கவில்லை. யார் யாருக்கு எல்லாம் எதிராக ஆதாரங்கள் சாட்சிகள் உள்ளதோ அதை வைத்தே மத்திய அரசின் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கின்றன. எனவே அந்த கட்சி இந்த கட்சி என்ற எந்த பாகுபாடும் பாஜகவுக்கு கிடையாது.

பாஜகவுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? எந்த சம்பந்தமும் கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே யாரு தவறு செய்து இருந்தாலும் மத்திய அரசு நிறுவனங்கள் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது?. இவ்வாறு அவர் கூறினார்.