தோல்வி பயத்தால் பிரதமர் நரேந்திர மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 3 மாதங்களில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவவுள்ளதால், இந்த விலைக்குறைப்பை கையில் எடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஆக.29) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.200 குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் சிறு விஷயத்தையாவது பிடித்துக்கொண்டு கரையேர பாஜக நினைக்கிறது. இந்தியா கூட்டணியின் 2 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 3வது கூடம் விரைவில் நடக்க உள்ளது. கர்நாடகத்தில் பாஜக தோல்வி அடைய சமையல் எரிவாயு உருளை விலையேற்றமே முக்கியக் காரணம். தோல்வி பயத்தால் தற்போது சமையல் எரிவாயு விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார் என விமர்சித்துள்ளார்.