என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்பதை திரும்பப்பெறக் கோரினோம். எமது கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநில மாணவர்கள் கொண்டாட வேண்டிய வெற்றி! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த பணிகளுக்கு இந்தித் தேர்வு கட்டாயம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது குறித்து எம்.பி. வெங்கடேசன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தைத் தொடர்ந்து பழைய அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, புதிய அறிவிப்பில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.