பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்ட தொடக்க விழா மைசூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில் அவர் பேசியதாவது:-
நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நடந்து கொண்டுள்ளோம். கர்நாடக மாதிரி திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதனால் பிற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் இதுகுறித்து ஆலோசனை வழங்குமாறு கேட்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் அரசு தேசிய அளவில் பெயர் பெற்றுள்ளது. உத்தரவாத திட்டங்களை பார்த்து பிரதமர் மோடி, அமித்ஷா, இது பொய் என்றும், கர்நாடகம் திவாலாகிவிடும் என்றும் கூறினர். ஆனால் காங்கிரஸ் அரசு உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதை பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்ட வேண்டும்.
மோடியும், அமித்ஷாவும் சத்தீஸ்கரில் பேசும்போது, காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தது என்று கேள்வி கேட்டுள்ளனர். என்னிடம் என்னென்ன பணிகளை செய்துள்ளோம் என்பது குறித்த பட்டியல் உள்ளது. பா.ஜனதாவினர் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு என்ன செய்துள்ளனர்?. நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு வரை கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு 2014-ம் ஆண்டுக்குள் அது 74 சதவீதமாக அதிகரித்தது. இந்த அளவுக்கு கல்வியறிவை வளர்த்தது காங்கிரஸ். 1947-ம் ஆண்டு பள்ளிகளுக்கு வந்த பெண்களின் எண்ணிக்கை 7 சதவீதம். அதை காங்கிரஸ் கட்சி 64 சதவீதமாக அதிகரித்தது. சிறுபான்மையினர், ஆதிவாசிகளின் கல்வியறிவும் 59 சதவீதமாக உள்ளது. பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்புகளை பெருமளவில் குறைத்தது காங்கிரஸ். கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்க நரேகா திட்டம் கொண்டு வந்தோம். இந்த திட்டத்தை நிறுத்துவதாக பா.ஜனதாவினர் கூறினர். ஆனால் மக்கள் நலன் சார்ந்த திட்டம் என்பதால் பா.ஜனதா தொடர்ந்து அமல்படுத்துகிறது. ஏழைகள் பசியால் வாடக்கூடாது என்பதால் உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தோம்.
மோடி என்ற பெயரை சொன்னால் பொய் வழக்கு போடுகிறார்கள். மோடி என்று கூறியதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்தனர். சுப்ரீம் கோா்ட்டு தலையீட்டால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்தது. ராகுல் காந்தி சிறிது கூட பயப்படவில்லை என்பது தான் முக்கியமான விஷயம். பா.ஜனதாவினர் காங்கிரசை குறை சொல்வதை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வேண்டும். நாட்டில் அரசியல் சாசனம் இல்லாவிட்டால் நாம் இருக்க மாட்டோம். நாட்டு மக்கள், பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிவார்கள். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.