பிரபல தமிழ் நாளிதழுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி கண்டனம்!

காலை சிற்றுண்டி திட்டத்தை அவமதிக்கும் வகையில் தலைப்பு சூட்டியிருந்த பிரபல தமிழ் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், பொதுக்கல்வியை பலப்படுத்தவும் தமிழ்நாடு அரசு வரலாறு நெடுக பல அற்புதமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அவர் அறிவித்திருந்தார். அதாவது, “நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள் என்று அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார். மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அறிந்துக்கொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்திருக்கிறது. இப்படி நாடு முழுவதும் இந்த திட்டம் குறித்து சிறப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று வெளியான ஒரு நாளிதழில் “காலை உணவு திட்டம்; மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு! ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று தலைப்பிட்டு செய்தி பிரசுரமாகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விடுத்துள்ள பதிவு வருமாறு:-

”உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை. தினமனுவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, “கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.