வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழில் பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், அபராதம் போதுமானதல்ல தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து தமிழில் பெயர் பலகை மாற்றாதவர்கள் மீது மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.