நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: கமல்ஹாசன் புகழஞ்சலி!

’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்.

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம். அதன்பிறகு கமல்ஹாசனின் பல படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர்களில் ஒருவரானார் ஆர்.எஸ்.சிவாஜி. நெல்சனின் ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். 2021ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று சென்னை உலக சினிமா விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.சிவாஜி கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி என்று நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல்கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.