நான் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு வருகிறேன். நீங்கள் 2 லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, மீண்டும் சீமான் மீது புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அதற்கான ஆதாரங்கள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை விஜயலட்சுமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணை சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் நடந்தது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. நான் உயர்ந்த லட்சியங்களைக் தூக்கிக் கொண்டு வருகிறேன். நீங்கள் இரண்டு லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள். அரசியல் களத்தில் இருந்து என்னை வீழ்த்துவதற்கு கையில் எடுத்துள்ள கருவி மிகவும் கேவலமானது.
13 ஆண்டுகளாக தேர்தல் வரும்போதெல்லாம் இந்த பிரச்னையை கிளப்புகிறார்கள். என் மீது அவதூறு கூறுவது போலவே, தன்னை ஏமாற்றியதாக மூன்று பேர் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருக்கிறார். சமூக மரியாதைக்கு மனித மாண்புக்கு ஒரு கண்ணியத்துக்கு நான் அமைதியாக இருக்கிறேன். நான் அமைதியாக இருப்பதால் விஜயலட்சுமி சொல்கிற குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று நினைக்க வேண்டாம். எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். ஒரு நாள் நான் வெடித்துச் சிதறினால் தாங்கமாட்டீர்கள். அவசியமற்றக் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியைக்கூட தொடமுடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும், புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியமற்றது. தேர்தலுக்குப் பணம்கொடுப்பதை நிறுத்துங்கள். நாட்டின் தேர்தல் செலவு குறையும். உடை, உணவு, பண்பாடு எனநிறைய வேறுபாடு இருக்கும்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியப்படும்?
காவிரியில் முதலில் தண்ணீர் வரட்டும். கச்சத்தீவு, முல்லை பெரியாறு என பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. காவிரியில் தண்ணீர்விடக் கோரி, தமிழகத்தில் பாஜக போராடுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.5,000 கோடி செலவு செய்து, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து பாஜக வாங்கியது. இது ஊழல் இல்லையா? பாஜகவின் ஊழல்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கர்நாடகாவில் பாஜக தோற்கக் காரணமே ஊழல்தான். திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிட்டதை வரவேற்கிறோம். அதேபோல, அதிமுகவினர் ஊழல் பட்டியலை பாஜக வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சிபுரிந்தும், குழந்தைகள் இன்னும் பட்டினியுடன் இருப்பதைத்தான் காலை உணவுத் திட்டம் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.