‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவினை மனதார பாராட்டுகிறேன்: ஓ.பன்னீர்செல்வம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவினை மனதார பாராட்டுவதோடு, அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் கொள்கை முடிவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கண் வரவேற்கிறேன். மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், சில விதிவிலக்குகளைத் தவிர, 1967 ஆம் ஆண்டு வரை ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முழக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அதற்கான முன்னெடுப்பினை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு, இதனுடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்த வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த ஆரம்பத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்கள் வாங்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றாலும், தொலைநோக்குப் பார்வையில் இதனை உற்றுநோக்கும்போது, வருங்காலங்களில் தேர்தல்களுக்கான செலவு கணிசமாக குறைக்கப்படும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அடுத்த ஆண்டு வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்குள், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் அரசமைப்புச் சட்டத்தில் 5 திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கை முடிவினை மனதார பாராட்டுவதோடு, அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.525 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றில் குறிப்பிட்ட தொகையை பரிசளித்தார். அத்துடன் BMW X7 கார் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். அதேபோல இயக்குநர் நெல்சனுக்கு செக் மற்றும் Porsche கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் நாளை காஞ்சிபுரத்திலிருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.