நடிகை விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரிக்க ஊட்டி விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார். 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தம்மிடம் இருந்து நகைகளையும், பல லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னை கைவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி நீண்டகால குற்றம்சாட்டி வருகிறார். 2011ஆம் ஆண்டில் போலீசிலும் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண் வன்கொடுமை, கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை ராமாபுரம் காவல்நிலையத்தில் துணை ஆணையர் உமையாள் சுமார் 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் விலாவாரியாக விசாரணை நடத்தினார். நேற்றும் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி, போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தை மீண்டும் வழங்கினார். இதை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார். சீமான் தன்னிடம் நெருங்கிப் பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகைக்கு விரைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஊட்டியில் இருந்து காரில் கோவை சென்றடைந்தார் சீமான், கோவையில் செய்தியாளர்கள் அவரிடம், கைது செய்ய சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் வருவதாக தகவல் வருகிறதே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், “என்னை கைது செய்ய வேண்டும் என்றால் உதகையில் உள்ள காவல்துறையினரே கைது செய்திருக்கலாம். வழக்கு சென்னையில் இருப்பதால் சென்னையில் வைத்து கைது செய்திருக்கலாம். நாளை மறுநாள் சென்னைக்குத்தான் போகிறேன். அங்கு வைத்து கூட சம்மன் கொடுத்திருக்கலாம். கைது செய்வதாக எந்த தகவலும் இல்லை. சம்மனும் வரவில்லை. என்னைப் பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுவது போல தெரிகிறதா? சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.