ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி சார்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நாளை டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தொடர் நடைபெற வேண்டியது உள்ளது. ஆனால் திடீரென மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை வரும் 18-ந் தேதி கூட்டியுள்ளது. இந்தக் கூட்டம் செப்டம்பர் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நாடு முழுவதும் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய பாஜக அரசு நியமித்துள்ளது. இக்குழுவில் இடம் பெற காங்கிரஸ் மறுத்துவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மும்பையில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணி எனும் எதிர்க்கட்சிகளின் அணியின் ஆலோசனைக் கூட்டத்திலும் ஒரே நாடு ஒரே தேர்தல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் மீண்டும் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணியின் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்து முடிவுக்கு எடுக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மணிப்பூர் விவகாரத்தில் பேச மறுத்த மத்திய அரசை, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பேச வைத்தது இந்தியா கூட்டணி. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராகவும் இந்தியா கூட்டணி வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது.