மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா, அபிநயா மற்றும் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பட குழுவினருடன் நடிகர் ஆர்யா, டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக படம் பற்றி விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வருகிற 15ம் தேதி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியில் செப்டம்பர் 22லும் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் மார்க், ஆண்டனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். முதல்முறையாக இதில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். அப்பா கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளேன். மார்க்கிற்கு ஜோடியாக ரித்து வர்மாவும், ஆண்டனிக்கு ஜோடியாக அபிநயாவும் நடித்துள்ளனர்.
சயின்ஸ் பிக்ஷன் டைம் டிராவல் படமாக உருவாகியுள்ளது. படத்தில் 1970 மற்றும் 1990 காலகட்டங்கள் என மாறிமாறி காட்சிகள் நகரும். ஆனால் பிளாஷ்பேக் போல இல்லாமல் ஒரு காட்சியில் 1975ம் வருடமும் இன்னொரு காட்சியில் 1995வது வருடமும் என அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கும். அதேசமயம் இது ‘ஏ சென்டருக்கு மட்டுமல்லாது கடைக்கோடி கிராமத்தில் இருக்கிற ரசிகருக்கும் தெளிவாக புரியும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளும் படப்பிடிப்பின் கடைசி நாளும் மட்டுமே பகலில் படப்பிடிப்பு நடைபெற்றது. மீதி அனைத்து நாட்களுமே இரவு நேர படப்பிடிப்புதான். படத்தில் எழுபதுகளில் நடக்கும் கதையில் பழைய எல்ஐசி கட்டிடம், டபுள் டெக்கர் பஸ் என பழமையான மெட்ராஸையும் காட்டியுள்ளோம். இதற்காக செட் மற்றும் கிராபிக்ஸ் பணிகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். கிட்டத்தட்ட 3000 கிராபிக்ஸ் காட்சிகள் இதில் இடம் பெறுகின்றன. அதேபோல 99 சதவீத காட்சிகள் செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன.
‘நான் சிவப்பு மனிதன்’ படத்தை தொடர்ந்து 8 வருடத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் என் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிலீசுக்கு முன்பாகவே படத்திற்கு தேவையான பலத்தை தனது இசையால் கொடுத்துள்ளார். இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டு வேலைகளை செய்து வருகிறோம்.
ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் வரும் செப்டம்பர் 15ல் இருந்து தான் துவங்கப் போகிறது. இதற்கு முன் அவர் பண்ணியது எல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்க நடத்திய போராட்டம் மட்டுமே. படத்தின் ரிலீஸ் தேதியை ஒன்றரை மாதத்திற்கு முன்பே தீர்மானித்து விட்டோம். விளையாட்டு போட்டி என்று இருந்தால் நிறைய வீரர்கள் இருந்தால் தான் சுவாரசியம். களத்தில் எந்த படம் இறங்கினாலும் போட்டியை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஹிந்தியில் மட்டும் ‘ஜவான்’ படம் ரிலீஸ் என்பதால் ஒரு வாரம் தள்ளி செப்டம்பர் 22ல் ரிலீஸ் செய்கிறோம்.
அரசியலுக்கு நேரடியாக வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேசமயம் மக்களிடம் சென்று நியாயமாக கோரிக்கை வைத்து தேர்தலிலும் போட்டியிடலாம். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அதற்காக தேர்தல் குறித்து பயமும் இல்லை. 2006ல் நான் நடிக்க வந்த புதிதில் நடிகர் ராதாரவி ஒருநாள் என்னை அழைத்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துவிடு என பணம் கட்டி சேர வைத்தார். ஆனால் பின்னாளில் அவரையே நடிகர் சங்க தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டு அவருடைய நாற்காலியிலேயே அமர்வேன் என்று அப்போது நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.