இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு: மம்தா பானர்ஜி

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தாம் பேசியது சரிதான். அதில் தவறு எதுவும் இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என்றார். மேலும் ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர். வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து இருந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் எந்த ஒரு செயலிலும் நாம் ஈடுபடக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். ரிக் மற்றும் அதர்வ வேதாக்கள் அதில் இருந்து வந்தவையே என்பதை நாம் அறிவோம். எனது ஆட்சியில் பல்வேறு சமய குருக்கள் பென்ஷன் பெறுகிறார்கள். அவர்கள் மத சடங்குகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.