சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் வார்த்தைகளுக்கு ஆதரவளிக்கிறேன்:பா.ரஞ்சித்

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த தமுஎகச மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, டெங்கு மற்றும் மலேரியாவைப் போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட முன்னணி தலைவர்களே உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக புகார் அளிப்பது, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவது தொடர்ந்து வருகிறது. ஒருபடி மேலே சென்ற அயோத்தி சாமியார், சனாதனம் ஒழிய வேண்டும் என்று சொன்ன உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் ரூ.10 கோடி பரிசு என சர்ச்சையாக பேசியுள்ளார். ஆனால், தான் பேசியதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த உதயநிதி, இன்னும் தனது குரல் சனாதனத்திற்கு எதிராக ஒலிக்கும் என்றும், சவால்களை சந்திக்கத் தயார் எனவும் கூறியுள்ளார்.

எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

அமைச்சர் உத்யநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி பெயராலும் மற்றும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கான வேர் சனாதனம்தான். அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், ஜோதிராவ் பூலே போன்ற சாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர்.

உதயநிதியின் பேச்சை திரித்து இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கிறார் என்று தவறாக கூறும் கேடுகெட்ட அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. உதயநிதிக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புகளும், தனி நபர் தாக்குதல்களும் மிகவும் கவலையளிக்கின்றன. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் வார்த்தைகளுக்கு ஆதரவளிக்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக உடன் நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.