தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசக்கிறது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.