சனாதனத்தை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல பார்க்க வேண்டும்: ஆ.ராசா!

மத்திய அரசு ‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் கி.வீரமணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும் என்று ஆ.ராசா கூறினார்.

சிறு வணிகர்களுக்கு கடனுதவி அளிக்கும் மத்திய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் என்று திராவிடர் கழகம் குற்றம் சாட்டியது. இந்த திட்டத்துக்கு எதிராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை கண்டித்து சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலிம், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கருணாநிதி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் தலைவர் வெங்குடு பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

கி.வீரமணி பேசியதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாரிசு அல்ல, கொள்கை வாரிசு. சாதி தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கையாக உள்ளது. ஒரு வாதத்துக்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மோடியை அவர்கள் பிரதமராக வர விட மாட்டார்கள். இதுபற்றி டெல்லியில் இருந்து ஒரு தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா’ என்ற சதித்திட்டத்தை முறியடிப்போம். இந்த போராட்டம் தொடக்கம்தான். திராவிடம் வெல்லும். இதை வரலாறு சொல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா பேசியதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இன்று இந்தியா முழுவதும் விவாதப்பொருள் ஆகியுள்ளது. அந்த விவாதப் பொருளுக்கு விடை சொல்லும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருக்கிறது. ஏனென்றால் சனாதனமும், விஸ்வகர்மா யோஜனாவும் வெவ்வேறு அல்ல. எனக்கு என்ன விந்தையாக இருக்கிறதென்றால், உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. அருவருப்பாகப் பார்க்கும்படி சனாதனத்தைச் சொல்லவேண்டும் என்றால் ஒருகாலத்தில் தொழுநோய் இருந்தது. பிறகு எச்.ஐ.வி இருந்தது. சனாதனம் என்பதை தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப் போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும்.

சனாதன தர்மத்தைக் கடைபிடியுங்கள் என பிரதமர் சொல்கிறார். அவர் கடைபிடித்திருந்தால் இத்தனை வெளிநாடுகளுக்குப் போயிருக்கக் கூடாது. ஒரு நல்ல இந்து கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு ஊர் சுற்றுவதே வேலை. சனாதன தர்மத்தை மீறி ஊர் சுற்றும் ஒரு ஆள், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? நேற்று நான் பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் சவால் விட்டேன். சனாதனம் பற்றி விவாதம் நடத்துங்கள். எங்கள் தலைவரின் அனுமதியோடு சொல்கிறேன். 10 லட்சம் பேரை, 1 கோடி பேரை டெல்லியில் திரட்டுங்கள். உங்கள் அத்தனை சங்கராச்சாரியார்களையும் மேடையில் உட்கார வையுங்கள். உங்கள் எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். வில், அம்பு, கத்தி, கொடுவாள் எல்லாவற்றையும் நிற்க வையுங்கள். நான் வெறும் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களோடு வருகிறேன். என்னை ஜெயித்துப் பார். நீங்கள் எல்லாம் மகா விஷ்வ குரு. உங்கள் பார்வையில் சாதாரண பஞ்சம சூத்திரன். உதயநிதி ஸ்டாலின் பேசியது மென்மையான பேச்சு. என்னைக் கேட்டால் இன்னும் கடுமையாகப் பேசுவேன். சனாதனத்திற்கு எதிரான எங்கள் கருத்தை எதிர்த்துப் பேசுவதற்கு உங்கள் தரப்பில் யாராவது ஆள் இருந்தால் டெல்லியில் எங்கு வேண்டுமானாலும் நாள் குறியுங்கள். ஆ.ராசா வருவதற்குத் தயாராக இருக்கிறேன். சனாதான இந்து வேறு, சாதாரண இந்து வேறு என்று நான் பேசினேன். ஐயோ, இந்துக்களை பிரித்துவிட்டார் ஆ.ராசா என்று 12 மொழிகளில் மொழிபெயர்த்து பரப்பிவிட்டார்கள். இன்று நாடு முழுவதும் பற்றிவிட்டது. இன்று இங்கே தொடங்கியுள்ள போராட்டம் அடுத்த பத்தாண்டு காலத்தில் முழு சமதர்ம மதச்சார்பற்ற நாடு என்பதை உணர்வோடு உருவாக்கும் காரியத்திற்கான தொடக்கப்புள்ளி இந்தக் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார்.

கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘இந்தியா’ கூட்டணியின் பெயரை பார்த்து அஞ்சி ‘பாரத்’ என்று பெயர் வைக்கிறார்கள். மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் இன்றைக்கு நாம் ஒன்றுப்பட்டுள்ளோம்.’ என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி கூறியதாவது:-

பொதுமக்களுக்கு கடன் கொடுத்து அவர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திட்டம் ஆபத்தானது. சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்த இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து எந்த மாநிலமும் போராட்டம் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் தான் முதலில் நடக்கிறது. சனாதனம் என்றால் பயங்கரவாதம் என்பது உதயநிதி ஸ்டாலினின் தலையைச் சீவ 10 கோடி அறிவித்ததில் இருந்தே தெரிகிறது. இந்த சனாதனம் பற்றி தற்போது தேசிய அளவில் பேசப்படுகிறது. இதனை நாம் பெருமையாக நினைக்க வேண்டும். இதனை பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும்.

திமுகவின் தலைவர் மகன் உதயநிதி, அது தான் அவர்கள் பிரச்னை. அதனால் தான் அவரை இழிவுபடுத்துகிறார்கள். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். பாஜகவின் ஆத்திரம் திமுக மீது தான். இந்தியா கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை. அது தான் உண்மை. இந்தச் சூழலில் தான் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் விழிப்பாக இருந்தால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய முடியும்.

சமத்துவம் என்பது தலித் மக்களுக்காக மட்டும் பேசும் அரசியல் அல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சமத்துவம் தேவை. பாகுபாடு என்பதுதான் இந்து மதத்தின் ஆன்மாகவாக இருக்கிறது. இந்த பாகுபாட்டைத்தான் சனாதனம் என்கிறோம். எல்லாவற்றிலும் மாற்றம் நிகழும் என்பது இயங்கியல், எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்பது சனாதனம். சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்து மக்களிடையே உள்ள இயல்பான நம்பிக்கையை, அரசியல் ஆதாயமாக மாற்றும் செயல் திட்டத்தை பாஜக தீட்டிவருகிறது. பெரும்பான்மை இந்துக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்தியாவை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பாஜவினர் இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள். பொய் பரப்புரை செய்து இந்துக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக திட்டம் போடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசியதாவது:-

“இந்தியா” கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதில் இருந்து பிரதமர் மோடி நிலை தடுமாறுகிறார். இப்போது நாட்டின் பெயர் இந்தியா என்பதை பாரத் என மாற்றுகின்றனர். 2016-ல் பாரத் என பெயர் வைக்க உச்சநீதிமன்றத்தில் எதிர்த்ததும் இதே பாஜக அரசுதான். இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவது ஒரு பெயர் மாற்றம் அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கான ஒரு தொடக்கம் இந்த பெயர் மாற்றம். அவர்கள் அகண்ட பாரத்தை நோக்கிச் செல்கின்றனர். அதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டம். அதாவது மத ரீதியாக 3-வது உலகப் போருக்கு இந்தியாவை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதல் உலகப் போரை ஹிட்லர் முடுக்கிவிட்டான். கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தான். அவனது முடிவு என்னானது என்பது உலகம் அறியும். அதைப் போல இன்று இந்தியாவுடன் பாகிஸ்தானை, சீனாவை, இலங்கையை இன்ன பிற நாடுகளை இணைத்து அகன்ற பாரதம் அமைப்போம்; அதுதான் உண்மையான இந்தியா. அதுதான் உண்மையான பாரதம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா. இந்த அஜெண்டாவை நிறைவேற்ற நிறைய முட்டாள்கள் தேவை.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அது குழிதோண்டி புதைக்கப்பட வேண்டும். அதுவரையில் இந்த போராட்டம் தொடரும். 2024-ம் ஆண்டு மட்டுமல்ல அதற்குப் பிறகும் இத்தகைய போராட்டங்கள் தொடரும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இருக்கிற வரையில் இந்த நாடு அமைதியாக இருக்காது. அமைதியாக இருக்க முடியாது. மத கலவரங்களும், ஜாதிய கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும். அதன் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆதாயம் அடைகிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பயன்படுத்தி குஜராத்தில் ஆதாயம் அடைந்தனர். இப்போது மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அடுத்தது ஹரியானா எரியத் தொடங்கி இருக்கிறது. இப்படி நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை மோதச் செய்து ஜாதிய ரீதியாக மோதச் செய்து தங்களது குறுகிய அற்பத்தனமான அரசியலை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கும் அதன் அரசியல் அமைப்பான பாஜகவும் முயற்சிக்கின்றன. இந்த அபாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அப்படி நம்பிக்கை வைத்திருந்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்லி இருக்க வேண்டும். அதற்கு மாறாக, தலையை கொண்டு வா ரூ.10 கோடி தருகிறேன் என்கிறார்கள். காந்திய கருத்தில் மாறுபாடு இருந்தால் மாற்று கருத்தை சொல்ல வேண்டும். அதற்கு மாறாக சுட்டுக் கொலை செய்தனர். ஏனெனில் ஜனநாயகம், விவாதங்களின் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்படி நம்பிக்கை இருந்திருந்தால் நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பார். இவ்வாறு முத்தரசன் கூறினார்.