ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் பங்கேற்காததில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர். ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இதனிடையே டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர்களின் பிரதிநிதிகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்காததில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு முன்பு பல்வேறு காலகட்டங்களில் சில ஜனாதிபதிகளும், பிரதமர்களும் சில காரணங்களுக்காக ஜி-20 மாநாடுகளில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த நேரங்களில் குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் நிலையை ஜி-20 மாநாட்டில் பிரதிபலித்து இருக்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்கள் அதற்கான தீவிரத்தன்மையை கொண்டிருப்பார்கள். இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.