வெறுப்பு ஒழிக்கப்படும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி

வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கடந்த ஆண்டு (2022) இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தாண்டு (2023) தொடக்கத்தில் காஷ்மீரில் நிறைவடைந்த சுமார் 4,000 கிமீ தூரம் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் மாண்டேஜ் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் பகிந்துள்ள ராகுல் காந்தி,

இந்தியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், அன்பினையும், ஒற்றுமையினையும் நோக்கி நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் கோடிக்கணக்கான பாதச்சுவடுகள் நாளைய சிறந்த நாட்டுக்கு அடித்தளமிட்டுள்ளது. வெறுப்புகள் அழிக்கப்படும் வரை, இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும். இது எனது வாக்குறுதி” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல, உடைந்த மனசாட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின் டுவிட்டர்பதிவில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி சமூகத்தில் வெறுப்பு மற்றும் விரோதப் போக்கின் மூலம் தொடர்ந்து போராடி வருவதாக அவர் கூறினார்.

பாரத் ஜோடோ யாத்திரை என்பது வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல உடைந்த மனசாட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சியாகும். நீதி, சுதந்திர சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை எங்களைப் பொறுத்தவரை மிக உயர்ந்தவை. நமது அரசியலமைப்பை மீட்டெடுக்கவும், நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களைச் சென்றடைகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் கடந்த 2022 ஆண்டு செப். 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். அங்கிருந்து கேளரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா எனத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் போது, ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டார். அதேபோல், 275 திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்களை நடத்தினார். சுமார் 4,000 கி.மீ., தூரம் கொண்ட இந்த நடைபயணத்தின் மூலம் ராகுல் காந்தி அடையாளம் மாறியது.