இந்தியா என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு பயப்படுவது ஏன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியா என்ற பெயரை மாற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இது அரசியலமைப்புக்கு எதிரான செயலாகும். நாட்டின் பன்முகத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் மோசமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதுபோன்ற வெட்கக்கேடான அரசியல் நடவடிக்கைகளை மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இந்தியா என்ற வார்த்தைக்கு பயப்பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்றாவது பிரிவில் நமது தேசத்தை இந்தியா என்றால் அது பாரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை நாம் இந்திய மக்கள் என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. இதில் இந்தியா என்ற வார்த்தையை அகற்றுவதின் மூலம் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்தியா என்ற வார்த்தைக்கு ஏன் பயப்பட வேண்டும்? ‘இந்தியா என்னுடைய நாடு இந்தியர்கள் அனைவரும் என்னுடைய சகோதர, சகோதரிகள்’ என்று மாணவர்கள் பள்ளிப்பருவம் முதல் படித்து வருகின்றனர். தாய் நாட்டின் இந்த சிந்தனையை அகற்றும் நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியுள்ளது. எனவே நம்முடைய நாட்டின் பெயரை மாற்றும் நடவடிக்கைகளில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.