சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு, அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம், ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக திரித்துக் கூறுவது தவறு என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டிற்கு தலைப்பு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் எனப் பேசினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி தலையைச் சீவினால் ரூபாய் 10 கோடி வழங்குவேன் என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். மேலும், சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதியின் சனாதனம் பற்றிய கருத்துக்கு தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேசமயம், நாடு தழுவிய அளவில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் திமுகவின் ‘சனாதனம்’ பற்றிய கருத்துகளை ரசிக்கவில்லை. இந்த நிலையில், சனாதனம் பற்றிய கருத்து தொடர்பான சர்ச்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடும் திறன் ஆகும். சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்தது மற்றும் சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது. சனாதனத்தைப் பற்றி கருத்து கூற உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் நீங்கள் விவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் அவரது வார்த்தைகளை திரித்துக் கூறி குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக வன்முறை அச்சுறுத்தல்கள், மிரட்டல் உத்திகள் செய்வது சரியானது அல்ல.
ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும். உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.