“இந்தியா” என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு: ப.சிதம்பரம்

“இந்தியா” என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு, காழ்ப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

அரசியல் சாசனத்தில் இந்தியா எனும் பாரத் என இருக்கிறது. அதாவது இந்தியாவும் இருக்கிறது பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம் பாரத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென இந்தியா மீது என்ன கோபம்? இந்த எதிர்க்கட்சி கூட்டணி I.N.D.I.A அப்படின்னு தன்னுடைய பெயரை சுருக்கி எழுதுவதால் “இந்தியா” மீது கோபம் வந்துருச்சு. நாளைக்கே BHARAT என எதிர்க்கட்சிக் கூட்டணி வைத்தால் என்ன செய்வார் திரு மோடி? பாரத்தையும் மாற்றிவிடுவாரா? இது எல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் ஒன்றுதான். உதாரணத்துக்கு பாரதியார், பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் என பாடியிருக்கிறார். ஆக பாரதம் என்பது நமக்கு ஒன்றும் விரோதம் இல்லை. ஆனால் இந்தியா மீது இவ்வளவு கோபம், வெறுப்பு, காழ்ப்பு திடீரென வந்ததுதான் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.