நடிகர் மாரிமுத்து மறைவிற்கு ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல்!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின. இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து:

தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்.

நடிகர் சரத்குமார்:

இயக்குநரும், பிரபல குணச்சித்திர நடிகருமான அன்பு நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மேஜிக் பிரேம்ஸுடன் இணைந்து தயாரித்த ‘புலிவால்’ திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறேன். வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்த அவரது பிரிவால் தீராத வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நடிகர் பிரசன்னா:

இயக்குநர் ஜி.மாரிமுத்து மறைவுச் செய்தி அறிந்து உடைந்துவிட்டேன். நாங்கள் இருவரும் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலிவால்’ படத்தில் சேர்ந்து பணியாற்றினோம். எங்களுக்கு இடையே அண்ணன் தம்பி போன்ற பிணைப்பு இருந்தது. அவரது வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஒரு நடிகராக அவர் நன்றாக முன்னேறிக் கொண்டிருந்தார். இன்னும் நீண்டகாலம் அவர் இருந்திருக்க வேண்டும். ‘போய்ட்டு வாப்பு’

இயக்குநர் மாரி செல்வராஜ்:

மாரிமுத்து அண்ணனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காலையில் எழும்போதே இப்படி ஒரு சோகமான செய்தி. என்னுடைய முதல் படத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். சினிமா, இலக்கியம் என நிறைய பேசியுள்ளோம். தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்தவர். விரைவில் அவருடன் ஒரு படம் செய்ய திட்டமிட்டிருந்தேன். அதை அவரிடமும் சொல்லியிருந்தேன். நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு, எளிமையாக படமெடுக்க விரும்புவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் சுசீந்திரன்:

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவருடன் சேர்ந்து ‘ஜீவா’ படத்தில் பணியாற்றினேன். சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதர். அவரது குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் நெல்சன்:

ஆத்மா சாந்தி அடையட்டும் மாரிமுத்து சார். உங்களுடன் பணிபுரிந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

நடிகர் அருண் விஜய்:

மாரிமுத்துவின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நல்ல நடிகரும் மனிதரமான அவர் மிக விரைவில் போய்விட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா அமைதியாக உறங்கட்டும்.