நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006- 2011வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

அதேபோல, 2001-2006 அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, ஐ.பெரியசாமி, பா.வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்குகள் குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில், விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்கும்படி கூறி இருக்கிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து இருக்கிறது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை எல்லோரும் வில்லனாக பார்க்கின்றனர். தனிப்பட்ட முறையில் ஆனந்த் வெங்கடேஷாக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை. ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் செல்லும்போது இன்னும் அதிகமான வழக்குகள் வெளியே வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை எதிர்கொண்டு சுத்தமாக வாருங்கள். கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.